கந்துவட்டிக்கு கடன் வாங்கி நண்பர்களுக்கு கடன்.. அப்பாவி முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை.!



Cuddalore Kattumannarkoil Saloon Owner Suicide due to Usury Loan Interest Problem

முடிதிருத்தும் தொழிலாளி கந்துவட்டிக்கு கடன் வாங்கி நண்பர்களுக்கு கடன் கொடுத்த நிலையில், நண்பர்கள் கம்பி நீட்டியதால் கந்துவட்டி கொடுமையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், உருத்திரசோலை கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரின் மகன் கவி என்ற கவியரசன் (வயது 33). இவர் முடிதிருத்தும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கவியரசனின் மனைவி ஸ்ரீ நிதி (வயது 26). தம்பதிகள் இருவரும் ஜம்ஜம் நகர் பகுதியில் தனிகுடித்தனம் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு சிவனேஸ் என்ற 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

கவியரசன் சிதம்பரம் சாலையில் உள்ள மேட்டுதைக்கால் பகுதியில் சொந்தமாக முடிதிருத்தும் கடையை வைத்து நடத்தி வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த சசி என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி நண்பர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த பணத்தை அவர்கள் திரும்ப தராததால், கவியரசன் மன உளைச்சலோடு காணப்பட்டு வந்துள்ளார். 

மேலும், கந்துவட்டிக்கு பணம் வாங்கி கொடுத்த விவகாரம் வீட்டிற்கும் தெரியாத நிலையில், சசி கவியரசுவின் மனைவிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். மேலும், வரும் 15 ஆம் தேதிக்குள் வட்டியுடன் அசல் தொகையை கொடுக்க வேண்டும் என்றும் கூறி மிரட்டி இருக்கிறார். 

Cuddalore

இதனால் கடந்த 3 நாட்களாகவே கவியரசன் மிகுந்த மன உளைச்சலோடு காணப்பட்டு வந்த நிலையில், அவரின் கடையில் மின்விசிறியில் தூக்கிட்டு இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டி வாங்கி நண்பர்களுக்கு கடன் கொடுத்ததால், பணத்தில் கால்பங்கில் கூட பெறாத அப்பாவி தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.