கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!
காலி மது பாட்டில்களை டாஸ்மாக் நிறுவனம் திரும்ப பெறும் திட்டத்தை ஏன் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மலை பகுதிகளில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்யவும், பின்பு பாட்டில்களை திரும்ப மீண்டும் ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திருப்பி வழங்கலாம் என்று யோசனை தெரிவித்தது.
பாட்டில்களை வனப்பகுதியில் பொது இடங்களிலில் வீசுவதால், காட்டுத் தீயினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம் . இதனை செய்ய தவறினால், மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது நீலகிரி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் மதுபாட்டில்கள் திரும்பப்பெறப்படுகிறது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதனையடுத்து இந்த திட்டத்தை ஏன் மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் முன்வைத்தனர். மேலும், அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆட்சியர்களும், டாஸ்மாக் மேலாளர்களும் சோதனை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கு அரசு தரப்பில், இந்த நடைமுறை தற்போது தான் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் படிப்படியாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.