நள்ளிரவில் டி.எஸ்.பி-க்கு போன்.. ஊசலாடிய இளைஞரின் உயிர்.. ஓடோடிச்சென்ற அதிகாரிகள்.. குவியும் பாராட்டுக்கள்.!



erode-man-suicide-attempt-chennai-friend-call-erode-dsp

சென்னையில் உள்ள வேளச்சேரியில் வசித்து வருபவர் லோகேஷ். இவர் ஈரோடு நகர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்தகுமாருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, "ஈரோட்டை சேர்ந்த நண்பர் அஜித் குமார், காதல் பிரச்சனையால் விஷமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதுகுறித்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை காப்பாற்றுங்கள்" என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து, அஜித் குமாரின் அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவரின் சார்பாக தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. இதனையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அஜித் குமாரின் இருப்பிடத்தை ஆய்வு செய்துள்ளனர். அதில், அவர் ஆப்பக்கூடல் புன்னம் கிராமத்தில் இருப்பது உறுதியானது. உடனடியாக ஆப்பக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

erode

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவல் துறையினர், அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது, அவரின் பெற்றோர்கள் இருவரும் வீட்டின் முன்புறம் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களை எழுப்பி தகவல் குறித்து கூறிய நிலையில், பதறிப்போன பெற்றோர் வீட்டிற்குள் ஓடி சென்றுள்ளனர். அந்த சமயத்தில், அஜித் குமார் வாயில் நுரைதள்ளிய நிலையில் இருந்துள்ளார். அஜித் குமாரை உடனடியாக மீட்ட அதிகாரிகள், விரைந்து செயல்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஜித்தின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையால் இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.