கோவில் திருவிழாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; ஜெனரேட்டரால் வந்த ஆபத்து...!!



Girl's brutality at temple festival; Danger from generator...

காஞ்சிபுரம் மாவட்டம் விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி லதா. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா இவர் சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு லாவண்யா (13) என்ற ஒரு மகளும், புவனேஷ் (9) என்கிற ஒரு மகனும் உள்ளனர். சரவணனின் மனைவி காஞ்சனா குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் சரவணன் லாவண்யாவையும், புவனேஷையும் விச்சந்தாங்களிலுள்ள மாமனார் வீட்டில் விட்டு விட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா,பாட்டி வீட்டில் வளர்ந்து வரும் லாவண்யா 7-ஆம் வகுப்பும், புவனேஷ் 4-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழைமை விச்சந்தாங்கலிலுள்ள அங்காளம்மன் கோவிலில் கடைசி நாள் திருவிழாவில் இரவு சாமி உற்சவ ஊர்வலத்திற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண,  மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அதற்காக மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி வீதியுலா நடந்தது. 

சாமி வீதியுலாவில் கலந்துக்கொள்ள ஆசைப்பட்ட சிறுமி லாவண்யா தனது தாத்தாவிற்கு தெரியாமல் மாட்டுவண்டியின் பின்புறம் அமர்ந்து சென்றுள்ளார். ஆசையுடன் திருவிழாவை பார்த்தப்படி சென்ற லாவண்யாவின் தலைமுடி மாட்டு வண்டியின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஜென்ரேட்டரில் சிக்கி உள்ளது. 

சிறுமியின் அழுகை சத்தத்தினை கேட்டு  மாட்டு வண்டியில் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக ஜென்ரேட்டரை‌ நிறுத்தினர். தலையின் மேல் பகுதி முழுவதும் பெயர்ந்து, படுகாயங்களுடன் இருந்த சிறுமியை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.