கேரள எல்லையில் அதிகாரிகள் உஷார் நிலை.. அதிரடி உத்தரவால் தடை.!
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த வாரத்தின் போது பறவைக்காய்ச்சல் காரணமாக கோழிகள், வாத்துகள் அதிகளவில் இறந்துபோயின. இதனைத்தொடர்ந்து, கோழி மற்றும் வாத்துகள் தமிழகத்திற்குள் வராமல் தடுக்க, தேனி மாவட்ட எல்லையில் முகாம் அமைத்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் பேரில், தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள கம்பம் மெட்டு, குமுளி சோதனைச்சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு, கேரளாவில் இருந்து கோழி, வாத்து மற்றும் முட்டை போன்றவற்றை கொண்டு வரும் வாகனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கால்நடை, கோழியை ஏற்றி, இறக்கி செல்லும் வாகனத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தமிழகத்தில் அனுமதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கோழி, முட்டை மற்றும் கால்நடையை ஏற்றிச்செல்லும் வாகனம் தடையின்றி இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது வரை பறவைக்காய்ச்சல் ஏற்படவில்லை என்றபோதிலும், மறு உத்தரவு வரும் வரை இந்நடைமுறை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.