பாசத்தை பொழிந்த குரங்கு.. வனத்துறைக்கு டிமிக்கி கொடுத்து, ஆட்டோ ஓட்டுனரை தேடி தப்பியோட்டம்.!



Krishnagiri Denkanikottai Monkey Love with Auto Driver Wont Go to Forest

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தேவரெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவி (வயது 42). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, ரவியின் ஆட்டோவில் குரங்கு ஏறியுள்ளது. இதனை ரவி விரட்டவே, குரங்கு ஆட்டோவை விட்டு செல்லாமல் அடம் பிடித்துள்ளது.

மேலும், ஆட்டோவை எடுத்து ரவி வேலைக்காக சென்றால், குரங்கும் அவரின் தோள்பட்டையில் அமர்ந்து பயணம் செய்ய தொடங்கியுள்ளது. இதனால் ரவி குரங்கு நம் மீது பாசமாக இருக்கிறது என்று எண்ணிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் குரங்குடன் இருப்பதை காணும் மக்கள், அச்சம் காரணமாக ஆட்டோவில் ஏற மறுத்து இருக்கின்றனர். சில தயக்கமின்றி பயணித்துள்ளனர்.

Krishnagiri

இதனையடுத்து, ரவி குரங்கை தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவெடுத்து, வனத்துறை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, குரங்கு ரவியை விட்டு பிரிய மனமின்றி, அவரின் தலைமீது ஏறி அமர்ந்துகொண்டது. வனத்துறை அதிகாரிகள் பல முயற்சி எடுத்தபோதிலும், குரங்கு அதிகாரிகளை எச்சரிப்பது போல பாய்ந்துள்ளது. 

இறுதியாக, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறை அதிகாரிகள் குரங்கை பிரித்த நிலையில், அது மீண்டும் ரவியுடன் செல்ல முயற்சித்தது. இதற்கு மேல் விட்டால் எத்தனை நாட்கள் ஆனாலும் பேசப்போராட்டம் தொடரும் என்பதை உணர்ந்த ரவி, குரங்கை நேக்காக பிடித்து கொடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

Krishnagiri

ஆனால், வனத்துறை அதிகாரிகள் பிடியில் இருந்த குரங்கோ, சாமர்த்தியமாக செயல்பட்டு அங்கிருந்து தப்பி தேன்கனிக்கோட்டை ஆட்டோ ஸ்டாண்ட் பகுதிக்கு சென்று ரவியை தேடியுள்ளது. ரவி அந்த தருணத்தில் சவாரிக்கு சென்றதால், அவர் இல்லாமல் ஏமாற்றத்துடன் குரங்கு அங்கேயே சுற்றி வருகிறது.