பங்குச்சந்தை முதலீடு நஷ்டம்.. பச்சிளம் பிஞ்சுகளை தவிக்கவிட்டு, பெற்றோர் விபரீதம்.. கண்ணீரில் குழந்தைகள்.!



Madurai Couple Suicide due to Loss of Share Market Investment

உக்ரைன் - ரஷியா போரால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பங்குசந்தையில் முதலீடு செய்த மதுரையை சேர்ந்தவர் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார். 

மதுரை மாவட்டத்தில் உள்ள பழைய குயவர்பாளையம், பச்சரிசிக்கார தோப்பு தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 46). இவரின் மனைவி லாவண்யா (வயது 34). தம்பதிகளுக்கு ரக்ஷிதா என்ற 15 வயது மகளும், அர்ஜுன் என்ற 13 வயது மகனும் இருக்கின்றனர். தனியார் பள்ளியில் ரக்ஷிதா 10 ஆம் வகுப்பும், அர்ஜுன் 8 ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர். 

நாகராஜன் பங்குசந்தைகளில் முதலீடு செய்து வந்த நிலையில், அது தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்தவராக இருந்து வந்துள்ளார். மேலும், பங்குச்சந்தை ஆலோசகராகவும் செயல்பட்டு வந்துள்ளார். பங்குச்சந்தையை பொறுத்த வரையில் அதில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால், அதற்கு ஏற்ற வகையில் முதலீடு செய்து வந்துள்ளார்.

இதனால் கிடைத்த நல்ல இலாபத்தினை வைத்து தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும், பங்குசந்தையில் முதலீடு செய்ய பலரிடம் இலட்சக்கணக்கில் அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் நாகராஜன் முதலீடு செய்ய, உக்ரைன் - ரஷியா போர் காரணமாக பங்குச்சந்தை கடுமையாக சரிந்துள்ளது. 

madurai

இதனால் இலட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்த நாகராஜனுக்கு நஷ்டம் ஏற்படவே, அதில் இருந்து எப்படி மீள்வோம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் நாகராஜனின் மனைவி மற்றும் மகள் பள்ளிக்கு சென்றுவிட, நாகராஜன் மற்றும் அவரின் மனைவி லாவண்யா வீட்டில் இருந்துள்ளனர். 

தனது பிள்ளைகளை தினமும் பள்ளியில் விட்டு, மீண்டும் நாகராஜனே வீட்டிற்கு அழைத்து வருவார் என்பதால், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது, நாகராஜன் மனைவி லாவண்யாவின் சகோதரி ஸ்ரீதேவி குழந்தைகளை பார்த்துள்ளார். 

அவர் குழந்தைகளை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்ட நிலையில், லாவண்யா மற்றும் நாகராஜனுக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து உறவினர்களுடன் இரவில் நாகராஜன் வீட்டிற்கு செல்ல, வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. 

madurai

பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே அறைக்குள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது, தம்பதிகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். 

பின்னர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக நடந்த விசாரணையில், பங்குச்சந்தை முதலீடு நஷ்டம் காரணமாக விபரீத முடிவை எடுத்து தெரியவந்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.