கல்லூரி மாணவர் மணிகண்டன் எப்படி இறந்தார்.? மதுரை கூடுதல் டிஜிபி கொடுத்த தகவல்.!



manikandan death reason

ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோலனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞர் மணிகண்டன் என்பவர் போலீசார் வாகன சோதனையின் பொழுது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு  விசாரிக்கப்பட்டார். 

போலீசார் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய மணிகண்டன் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தார் புகார் தெரிவித்து அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரம் மாணவரை தாக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து, சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. ஆனாலும் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், ஊர் மக்களும் போராட்டம் நடத்தினர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மறு உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில், உடற்கூராய்வுக்குப் பின் இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், மணிகண்டன் உடல் இரண்டு முறை உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆர்.டி.ஒ.-விடம் உரிய விவரங்கள் அளிக்கப்பட்டு, டிஜிபி தலைமையில் அனைத்துவகை விசாரணையும் நடைபெற்றுள்ளது. உடற்கூராய்வின் முடிவில், ஆம்புலன்ஸிலேயே அவர் இறந்துதான் இருந்தார் என்பது உள்ளிட்டவையெல்லாம் உள்ளது.

மணிகண்டன், விஷமருந்தியே தற்கொலை செய்திருக்கிறார். மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டதால், அதுதொடர்பாக விசாரணை நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் உயர்நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மணிகண்டனின் பெற்றோருக்கும் காவல் துறை தரப்பிலிருந்து தனிப்பட்ட விதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.