நாய்கள் கடித்த பதற்றத்தில் மூர்ச்சையான குரங்கு.. உயிரை காப்பாற்றிய பெரம்பலூர் ஓட்டுநர் பிரபு.!
நாய்களால் தாக்கப்பட்ட குரங்கு மூர்ச்சையாகிவிட, ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு குரங்கின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் பெரம்பலூர் அருகே நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓதியம், சமத்துவபுரம் பகுதியில் இருந்த குரங்கு ஒன்றை அப்பகுதி நாய்கள் கண்டித்துள்ளது. இதனால் பயந்துபோன குரங்கு மரத்தின் மீது ஏறிய நிலையில் மயக்கமடைந்து மூர்ச்சையாகி இருந்துள்ளது. இதனைகவனித்த கார் ஓட்டுநர் பிரபு, குரங்கு அரைமயக்கத்தில் இருந்த போதிலே அதனை கீழ வரவழைத்துள்ளார்.
குரங்கு கீழே வந்ததும் தண்ணீர் கொடுக்க முயற்சித்த போதும், அதனை குடிக்காமல் மயங்கியுள்ளது. இதனால் பதற்றமடைந்த பிரபு, நெஞ்சில் கை வைத்து அழுத்தியும், வாயோடு வாயைவைத்து மூச்சை செலுத்தியும் முதலுதவி செய்துள்ளார். பின்னர், குரங்கின் உயிரை காப்பாற்ற எண்ணி, இருசக்கர வாகனத்தின் உதவியுடன் பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு குரங்கை கொண்டு சென்று அனுமதி செய்தார்.
பின்னர், குரங்கு சிகிச்சைக்கு பின்னர் கண்விழித்துக்கொள்ளவே, குரங்கை வனப்பகுதியில் விட திட்டமிட்டு மாவட்ட ஆட்சியருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு விஷயத்தை கூறி, அவர்களை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரியிடம் குரங்கை பிரபு ஒப்படைத்துள்ளார்.