பால் கொள்முதல் விலையை உயர்த்திய அரசு: நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு..!
ஆவின் பால் கொள்முதல் விலை நவம்பர் 5-ஆம் தேதியில் (நாளை) இருந்து உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது. கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ரூ.32 ஆகவும், எருமைப்பால் லிட்டர் ரூ.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம், நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த 16.5.2021 முதல் அனைத்து வகைகளுக்கான பால் விற்பனை விலையினை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இடுபொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவுகள் போன்றவை அதிகரித்துள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தனர். எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி, 32 ரூபாயில் க 35 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி 41ரூபாயில் இருந்து 44 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 5-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் இந்த கொள்முதல் விலை உயர்வால், நேரடியாக பயனடைவார்கள். விலைவாசி உயர்வை தொடர்ந்து, கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.