கடனை செலுத்த முடியாததால் விபரீதம்.. கூலித்தொழிலாளியின் துயர முடிவால் சோகம்.!



puthukkottai-man-suicide-for-not-pay-the-loan

வாங்கிய கடனை கட்ட முடியாததால், ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகாமையில் பழையவளவு அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் இளையராஜா (எ) சின்னதம்பி (வயது 32). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. தம்பதிகளுக்கு பிரதீப் என்ற 3 வயது மகனும், பிரதீபா என்ற 2 வயது மகளும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இளையராஜா தான் வாங்கிய கடனை கட்ட இயலாமல் கடன் தொல்லையால் மிகுந்த கவலையுடன் இருந்துள்ளார். மேலும், கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில், இனி நாம் உயிரோடு இருப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்ற விபரீத எண்ணம் எழுந்துள்ளது. இதனால் மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகாமையில் உள்ள தைலமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Pudhukottai

இதனை தொடர்ந்து மரத்தில் அழுகிய நிலையில், ஒரு ஆண் சடலம் தூக்கில் தொங்குவதை கண்ட பொதுமக்கள், பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொன்னமராவதி காவல்துறையினர் அழுகிய நிலையில், தூக்கில் தொங்கிய உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விசாரணையில், இறந்த நபர் இளையராஜா என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எதற்காக இவர் தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.