பேருந்தில் பள்ளி மாணவிகள் மது குடித்த விவகாரம்: இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும்.! ராமதாஸ் வேதனை



ramadas feel sad for students drunk

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அரசு பேருந்தில் பள்ளி சீருடையுடன் இருந்தபடி மதுகுடிப்பது போன்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த விடியோவால் தமிழகமே அதிர்ச்சிக்குள்ளானது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் சிறார் குற்றங்களும், சிறார் ஒழுங்கீன நடவடிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழந்தை நல ஆர்வலர்கள் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவை பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்தக் காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்கு செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.

மாணவ, மாணவியர் மது அருந்தி அநாகரிகமாக நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த  2015-ஆம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதும், அவர்களில் இருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். தனியார் பள்ளிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததாக பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாவது தான் சோகமாகும்.

பொது வெளியில், அரசு பேருந்தில், பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து, எந்தவித அச்சமும், நாணமும் இன்றி மது அருந்துவது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். அதேநேரத்தில் இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இத்தகைய காட்சிகள் இளைய தலைமுறை மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை. கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியம் என்று சிலர் அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.  அக்காட்சியின் போது ‘மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால், அதுவே பாவத்திற்கான பரிகாரமாகி விடும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். சீரழிவுக்கு துணை போகும் சில திரைத்துறையினரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

2003ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்ப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறதுமுன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர், மாணவியருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது  மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம். தமிழ்நாட்டில் மதுக்கடைகள் நண்பகல் 12.00 மணிக்குத் தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போதே, 17 வயது கூட நிரம்பாத மாணவச் செல்வங்களின் கைகளில் மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைத்தன? இந்த வினாவுக்கு விடையளிக்காமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாக கடந்து சென்று விட முடியாது.

முதலில் 4 வயது குழந்தைக்கும், பின்னர் 10 மாதக் குழந்தைக்கும் அவர்களின் உறவினர்களே மது கொடுத்து குடிக்கச் செய்த கொடூரங்களை தமிழகம் பார்த்தது, கோவை தனியார் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி போதையில் சாலையில் செல்பவர்களையும், பொதுமக்களையும், காவல்துறையினரையும்  ஆபாச வார்த்தைகளால் திட்டி மயங்கி விழுந்ததையும் தமிழகம் பார்த்தது, திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது குடித்த அவலத்தையும் தமிழகம் பார்த்தது, கரூரிலும், மணப்பாறையிலும் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையுடன் சாலையில் மயங்கி விழுந்து  சுயநினைவின்றி கிடந்த கொடுமையை தமிழகம் பார்த்தது, அனைத்துக்கும் உச்சமாக பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவை தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை. மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று  கேட்டுக்கொண்டுள்ளார்.