தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 3 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது, மேலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய போதுமான காரணங்களை விளக்கவில்லை என்று கூறி அந்த சட்டத்தை ரத்து செய்தது. மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதுபோன்ற சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்கள் தடை சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.