இஸ்லாமிய பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளர்... போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்...!



The principal who sexually harassed the students in the Islamic girls' school...

திருநெல்வேலி மேலப்பாளையம் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் தாளாளர் தவறாக நடந்ததாக கூறி பள்ளியில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெரும்பாலும் இஸ்லாமிய மாணவிகளே படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில் குதுபுன் நஜீப் என்பவர் தாளாளராக உள்ளார். இவர் அங்கு படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவிகள் மூன்று பேருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. தாளாளர் அந்த மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக சொல்லி மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

இந்த தகவல் தெரிந்ததும் மாணவிகளின் பெற்றோர் மற்றும்  இஸ்லாமிய அமைப்புகள் திரண்டு வந்து மாணவிகளுக்கு ஆதரவாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. கல்வித்துறை அதிகாரிகள்,திருநெல்வேலி மாநகர காவல்  துணை ஆணையர் சீனிவாசன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆனந்த பிரகாஷ், ஆகியோர் பள்ளிக்கு வந்து மாணவிளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

உடனடியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறுவோம் என்று மாணவிகள் மற்றும் பெற்றோர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் போலீசார் தாளாளர் குதுபுன் நஜீப் மீது போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.