சட்ட விரோதமாக தென்னை மர 'கள்' விற்ற பெண் தப்பியோட்டம்: வலைவீசி தேடும் போலீசார்..!



The woman who sold coconut trees illegally is on the run

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள பெரங்கியம்-அரங்கூர் செல்லும் காட்டுப்பாதையில் சட்டவிரோதமாக தென்னை மரத்தில் இருந்து இறக்கப்பட்ட கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் காவ்யாவுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் துணை காவல் கண்காணிப்பாளர் காவ்யா தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தென்னை மர கள் விற்பனை செய்த பெண் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து அங்கிருந்த 8 லிட்டர் கள்ளை தனிப்படை காவலர்கள் பறிமுதல் செய்து ராமநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இது குறித்து ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தப்பி ஓடிய பெண் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூர் மங்கலம் நகரை சேர்ந்த செங்கேணி என்பவரது மனைவி செல்வி (38) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தப்பி ஓடிய செல்வியை காவல்தூறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.