பள்ளியில் தற்கொலை நடந்தால் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு.. கல்வித்துறை உத்தரவால் பதறும் நிர்வாகங்கள்..!!
பள்ளியில் நடக்கும் அனைத்திற்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் என கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பள்ளியில் பயின்று வந்த 17 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பள்ளியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பல நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்னர் மாணவியின் உடலானது பெற்றோரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என உறுதி செய்யப்பட்ட நிலையில், இனி வரும் நாட்களில் பள்ளியில் மாணவர்கள் தற்கொலை செய்யாமல் இருக்கவும், அதற்குரிய பொறுப்பை தலைமையாசிரியர் ஏற்க வேண்டும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த உத்தரவில், "பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாகவே பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் சாலை விபத்து மற்றும் மாணவர்கள் சண்டையிட்டு கொள்ளுதல் என எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் போன்றவற்றை முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு தெரிவிக்ககூடாது.
பேருந்தில் வரும் மாணவர்கள் மேற்கூரையில் அமர்ந்து வருவதை தவிர்க்க இறைவணக்க கூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும். உள்ளூர் விடுமுறை விட்டால் அது குறித்தும் முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள் தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்னஞ்சலை திறந்து பார்த்து அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடம் எடுக்கும்போது ஆசிரியர்கள் கைபேசியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது. மதிய உணவு இடைவெளிக்கு பிறகு கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் கைபேசி கொண்டு வருவதை தவிர்ப்பதுடன், ஜங்க் ஃபுட் கொள்வதையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான கட்டிடத்தில் மாணவர்களை அமர வைக்க கூடாது" என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள அரசு, மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது