3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
கோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர்! 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் சரக்குவேன் ஒன்றில் துறையூர் அருகே S.N. புதூர் என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெறும் பூஜைக்காக புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் சென்ற வாகனம் துறையூர் அருகே திருமானூர் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்குவேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 22 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஆரம்பித்தனர்.
ஆனால் சம்பவ இடத்திலேயே பேரூரை சேர்ந்த குணசீலன், குமாரத்தி, கோமதி, கயல்விழி , சரண் குமார் மற்றும் குழந்தைகள் சஞ்சனா (4), யமுனா (8) , எழிலரசி (6) என 8 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் இறந்த 8 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வேன் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.