#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இ-ஸ்கூட்டருக்கு அதிக நேர சார்ஜிங்.. பேட்டரி வெடித்து தந்தை - மகள் பரிதாப மரணம்.. மக்களே உஷார்.!
மின்சார இருசக்கர வாகனத்திற்கு சார்ஜ் ஏற்றும்போது, பேட்டரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் தந்தை - மகள் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன அல்லாபுரம், பலராமன் முதலியார் தெருவில் வசித்து வருபவர் துரை வர்மா (வயது 49). இவர் டோல்கேட் அருகே போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளார். துரை வர்மா மற்றும் அவரின் மனைவிக்கு மோகன பிரீத்தி (வயது 13) என்ற மகளும், அவினாஷ் (வயது 10) என்ற மகனும் இருக்கின்றனர்.
இதில், மோகன பிரீத்தி போளூரில் இருக்கும் பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தவாறு, அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தந்தையை பார்க்க வேலூர் வந்துள்ளார். துரைவர்மா பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனம் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம் என 2 வாகனங்கள் வைத்துள்ளார்..
மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்திற்கு இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றுவது வழக்கம். இவரின் வீடு குறுகலான சந்து பகுதியில் அமைந்திருந்ததால், வீட்டின் வாசலில் வைத்து மின்சார இரு சக்கர வாகனத்திற்கு சார்ஜ் ஏற்றி வந்துள்ளார். அவினாஷ் பெரும்பாலும் தனது அத்தை வீட்டில் இருப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்திற்கு சார்ஜ் போட்டுவிட்டு தந்தையும் - மகளும் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், பேட்டரி தொடர்ந்து சார்ஜ் ஏறியதால் அதிகளவில் சூடாகியுள்ளது. இதனால் அதிகாலை 02:30 மணியளவில் திடீரென அது வெடித்து சிதறியுள்ளது.
அப்போது, அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெட்ரோல் வாகனமும் பற்றி எரிய தொடங்கிய நிலையில், கண்விழித்து பார்த்த தந்தை - மகள் வீட்டை விட்டு வெளியேற இயலாமல் தவித்துள்ளனர். மின்சார வயர்களும் தீப்பிடித்து வீட்டிற்குள் எரியத்தொடங்க, வீட்டில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
வீட்டில் ஜன்னல் வசதி கூட இல்லை என்பதால், அங்கிருந்து புகையும் வெளியேறாமல் இருந்துள்ளது. உயிருக்காக தந்தையும் மகளும், கழிவறையில் கதவை பூட்டி அமர்ந்திருந்த கரும்புகை கழிவறையையும் சூழ்ந்து இருவரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரும்புகை மற்றும் வெடி சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பாகாயம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை போராடி அணைத்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தந்தையும் - மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்தது அம்பலமானது. தந்தை - மகளின் உடலை பார்த்து உறவினர்கள் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.