நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக துவங்கவிருக்கிறது! எப்போது ரிசல்ட் தெரியும்?



vote counting satart time

நாங்குநேரி சட்டசபை தொகுதி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.


நாங்குநேரி சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்தநிலையில் அவரது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தநிலையில் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

vote counting

அதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் இறந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க.சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் இன்று 24.10.2019(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் குறித்து காலை 9 மணியில் இருந்து தெரியவரும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை கைப்பற்றுவது யார் என்பது குறித்து பிற்பகலில் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.