கொடூரத்தின் உச்சம்.. 33 பயணிகளை பேருந்திற்குலேயே எரித்து கொலை செய்த பயங்கரவாதிகள்.!
பயணிகள் பேருந்தை இடைமறித்து, ஓட்டுனரை கொலை செய்த பயங்கரவாதிகள் பேருந்துக்கு தீ வைத்து 33 பயணிகளை கொடூரமாக எரித்து கொலை செய்துள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி கொலை செய்து வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் வருடத்தில் இருந்து பாதுகாப்பு, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வரும் மாலி நாடு, ஐ.நா மற்றும் பிரெஞ்சு, ஐரோப்பிய நாட்டின் வீரர்கள் உதவிக்காக முகாமிட்டு இருந்தாலும், கிளர்ச்சி, இன மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் பல நாடுகளுக்கு அகதிகளாகவும் புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மாலியில் உள்ள முப்தி மாகாணம், சோவிரி நகரில் பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது.
இந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், பேருந்து அங்குள்ள சாங்கோ ஹெரி பகுதியில் செல்கையில் பயங்கரவாதிகள் பேருந்தை இடைமறித்து, ஓட்டுனரை கொலை செய்து பேருந்தின் கதவுகளை மூடி தீ வைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பேருந்தில் பயணித்த 33 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 7 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.