விவசாயிகளை மகிழ்விக்க வேட்டிய மடிச்சு கட்டி வயலில் இறங்கிய முதல்வர்



kumarasamy with farmers in karnataka

கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெறுவது வழக்கமான விஷயம். இந்த பிரச்சனையை முன்னிறுத்தியே கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள்  அமைந்தது. இப்போது அம்மாநில அரசு விவசாய நலன்களை காக்க அக்கறை செலுத்தி வருகிறது. 

இந்நிலையில் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி வயலில் இறங்கி விவசாயிகளுடன் நாற்று நட்டார். இது விவசாயிகளுக்கு உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது. 

kumarasamy

கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையால், 10 ஆண்டுகள் நீடித்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான குடகு, மண்டியா, மைசூரு, ராமநகர், துககூரு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. 

சீதாபுரா கிராமத்துக்கு இன்று சென்ற கர்நாடக முதல்மந்திரி அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தாம் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி கட்டிய முதல்மந்திரி நிலத்தில் இறங்கி நாற்று நட துவங்கினார். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

kumarasamy

இதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு தாம் நாற்று நட்டது யாரிடமும் தம்மை நிரூபிப்பதற்காக இல்லை என்றும், விவசாயிகளுடன் என்றும் தாம் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு தாம் செய்ததாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளுடனும் தாம் இருப்பதாகவும், அவர்களின் குறையை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.