BSNL-இல் ஏற்பட்டுள்ள அதிரடி விலை உயர்வு; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சமீபத்தில் பல அதிரடி சலுகைகளை வழங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் திடீரென இரண்டு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26 நாட்களாக இருந்த வேலிடிட்டி 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்களை மாற்றுவதற்கு 10 ரூபாயாக இருந்த கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
தகவல் தொலைத்தொடர்பு துறையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது ஜியோ நிறுவனம். இந்நிறுவனத்திற்கு போட்டியாக சமீபகாலமாக பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர்.
ஆனால் பிஎஸ்என்எல்லின் தற்போதைய அறிவிப்புகள் வாடிக்கையாளர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு பெரும் சரிவை ஏற்படுத்தும் எனவும் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதில் முதல் மாற்றமாக இதுவரை 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26 நாட்களுக்கு அன்லிமிட்டட் கால் வசதியை பிஎஸ்என்எல் வழங்கி வந்தது. தற்பொழுது இதனை இரண்டு நாட்களாக குறைத்து வெறும் 24 நாட்களுக்கு மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது. இந்த 99 ரூபாயுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 319 ரூபாய்க்கான ரீசார்ஜ்ல் எந்த மாற்றமும் இல்லை. 319 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வழக்கம்போல 90 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் வசதியினை பெறலாம்.
அடுத்ததாக பிஎஸ்என்எல் எடுத்துள்ள முடிவு தான் வாடிக்கையாளர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சிம்களை மாற்றுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்தது. ஆனால் 21 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள புதிய முறையில் சிம்களை மாற்றம் செய்வதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்க போவதாக அறிவித்துள்ளது. இது முந்தைய விலகி விட 10 மடங்கு அதிகமாகும். பல இடங்களில் 4ஜி சிம் கார்டுகளை வெறும் 19 ரூபாய்க்கு வழங்கி வருகிறது பிஎஸ்என்எல். ஆனால் இந்த விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.