"இந்த அசிங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது..." அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி கருணாநிதி கண்டனம்.!!



his-speech-was-unacceptable-kanimozhi-karunanidhi-post

சமீபத்தில் சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பொன் முடியை துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விடுவித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சைவம், வைணவம் பற்றிய சர்ச்சை பேச்சு

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவத்தையும் விலை மாதர்களையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார். மேலும் அவரது பேச்சில் பெண்களைப் பற்றிய இழிவான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது ஆளும் கட்சியான திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

பதவி பறிப்பு

இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கட்சியின் துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடியை கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக தெரிவித்திருந்தார். பொன்முடி கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய களங்கமாக பார்க்கப்படுகிறது. மேலும் சமீப காலமாக அவர் பெண்கள் குறித்து சாதிய ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் பல்வேறுபட்ட சர்ச்சை கருத்துக்களை கூறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா... முடிந்தால் திமுக அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றட்டும்..." முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!

கனிமொழி கருணாநிதி கண்டனம்

பொன்முடி பேசிய கருத்துக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், எந்த காரணத்திற்காக பேசப்பட்டாலும் இது போன்ற அசிங்கமான பேச்சுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: "சொல்லி அடிக்கும் கில்லி.." முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள்.!! கலக்கத்தில் ஆளுநர் மாளிகை.!!