டவர் சரியா கிடைக்கலையா! இனி கவலைய விடுங்க; வந்துவிட்டது புதிய செயலி
மொபைல் போன்களில் சிக்னல்கள் சரியாக கிடைக்காத நேரத்தில் WI-FI இணைய வசதி மூலம் அழைப்புகளை மேற்கொள்வதற்கு வசதியாக WINGS என்னும் செயலியை BSNL நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொபைல் சிக்னல்கள் இன்னும் மோசமாகவே கிடைக்கின்றன. இதனால் மக்களால் தங்களுக்கு தேவையான நேரங்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடிவதில்லை. ஆனால் அதே சமயம் ஒரு சில பகுதிகளில் வைபை இணையவசதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகி வருகிறது. எனவே மொபைல் சிக்னல் கிடைக்காத நேரங்களில் இந்த WI-FI வசதியின் மூலம் அழைப்புகளை மேற்கொள்வதற்கென பிரத்தியேகமாக பிஎஸ்என்எல் WINGS என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியினை எல்லோராலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த செயலியினை பயன்படுத்துவதற்கு முன்பு தனிநபர் ஒருவர் தன்னுடைய விவரங்களை பிஎஸ்என்எல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு அளிக்கப்படும் கடவுச்சொல்லை கொண்டு அந்த செயலியை அவர்களால் இயக்க முடியும்.
எந்த வகையான நெட்வொர்க் சிம் கார்டுகளை பயன்படுத்தினாலும் இந்த புதிய செயலின் மூலம் ஒருவரால் அழைப்புகளை ஏற்கவும் செலுத்தவும் முடியும். மேலும் இந்த செயலியானது ஒருவரின் மொபைல் போனில் உள்ள காண்டாக்ட் எண்களையும் காண்பிக்கும் திறன் கொண்டுள்ளது எனவே அழைப்புகளை மேற்கொள்வதற்கு எங்களை எண்களை தேட வேண்டிய அவசியம் இல்லை.
இத்தகைய சிறப்பான செயலியில் வருத்தமான செய்தி என்னவெனில் இதனை பயன்படுத்துவதற்கு ஒரு ஆண்டிற்கு 1099 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் அரசு, வங்கி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் ஒருசில சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து ஒரு ஆண்டிற்கான தொகையினை செலுத்தியவுடன் இதன் வசதிகளை உடனடியாக ஒருவரால் அனுபவிக்க முடியும்.
மேலும் இந்த செயலின் மூலம் சர்வதேச அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதற்கென்று தனியாக 2000 ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த அழைப்புகளுக்கு மட்டும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.