ஜியோவிற்கு போட்டியாக அதிரடி சலுகையை அறிவித்துள்ள முன்னணி நிறுவனம்
மொபைல் நெட்வொர்க் சேவையில் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வெறும் 1312 ரூபாய்க்கு ஒரு வருடம் முழுவதும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 5 ஜிபி டேட்டா வழங்குகிறது.
ஒரு காலத்தில் அசுர விலையில் இருந்த இன்டர்நெட் மொபைல் டேட்டா இன்று குறைவான விலையில் கிடைக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ என்பதை யாராலும் மறுக்க முடியாது. மொபைல் கால்ஸ் மற்றும் இணைய டேட்டா வசதியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது ஜியோ. இதனால் ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் பெரும் இழப்பை சந்தித்தது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் 1312 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் 5 ஜிபி டேட்டா அளிக்கப்படுகிறது. மொபைல் டேட்டா அதிகம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஒரு வருட சலுகை மிகவும் பயனுள்ளதாக அமையும். இதே வசதியை பெற ஜியோ வாடிக்கையாளர்கள் 1699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மேலும் பிஎஸ்என்எல் 1699 ரூபாய்க்கும் 2099 ரூபாய்க்கும் ஒரு ஆண்டிற்கு பல்வேறு சலுகைகளை அளிக்கக்கூடிய பிளான்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.