அங்குல நிலத்தை கூட விட்டுத்தரமாட்டோம் - கர்நாடக முதல்வர் பரபரப்பு பேச்சு..!



Karnataka CM Basavaraj Bommai Talks about No one Inch in Border

மாநில எல்லையில் எங்களின் நிலத்தை ஒரு அங்குலம் கூட விடமாட்டடோம் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பரபரப்பாக பேசினார். 

மகாராஷ்டிரா - கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலத்தின் கீழ் வரும் பெலகாவி மாவட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த மராட்டியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பெலகாவி மாவட்டத்தை மஹாரஷ்டிராவுடன் இணைக்க வலியுறுத்தி வரும் நிலையில், அம்மாவட்டத்தில் கன்னடர்கள் - மராட்டியர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட மராட்டியர்கள் பெரிதும் போற்றும் சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், மராட்டிய ஆதரவு அமைப்பின் தலைவர் மீது கன்னட ஆதரவாளர்கள் கருப்பு மை ஊற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மராட்டியர்கள் கன்னட கொடியை தீயிட்டு கொளுத்த, பெலகாவி மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் 2 நாட்கள் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 

வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் காவல் துறையினர் கைது செய்த நிலையில், வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, தேசத்தலைவர்களின் சிலையை அவமதிப்பது தேசத்துரோகம் என்று கடுமையாக பேசினார். மேலும், மாநிலத்தின் கொடியை அவமதிப்பதும் அம்மாநிலத்திற்கு செய்யும் துரோகம். இரண்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றினார். 

karnataka

தொடர்ந்து அவர் பேசுகையில், எல்லை விஷயத்தில் பெலகாவி மாவட்ட எல்லை முடியும் இடத்தில் ஒரு அங்குலம் கூட அடுத்த மாநிலத்திற்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். அவற்றில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கன்னடர்கள் உள்ள எல்லைப்பகுதியில், அங்குள்ள மக்கள் கர்நாடகாவுடன் இணைய விரும்பி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். 

அவர்களின் தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த தீர்மானம் குறித்த கோரிக்கை அனுப்பி வைக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கன்னடர்கள் பாதுகாப்பிற்கும் கர்நாடக அரசே முழு பொறுப்பு ஆகும். ஆகையால், அவர்களின் மீது நடக்கும் துயரத்தை கண்டு மாநில அரசு அமைதியாக இருக்காது. அமைதியான பேச்சுவார்த்தைக்கு மகாராஷ்டிரா அரசு முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.