பால் கேனில் மதுபாட்டில்கள் கடத்தல்.. கையும் களவுமாக சிக்கிய பால்காரர்!
டெல்லியில் நள்ளிரவில் பால்காரர் ஒருவர் பால் கேன்களில் 7 மதுபாட்டில்களுடன் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
டெல்லி புலந்ஷாகர் பகுதியை சேர்ந்த பால்காரர் பாபி சௌத்ரி. இவர் நாள்தோறும் குர்கான் பகுதியில் பால் விநியோகம் செய்து வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் பாபி 4 பால் கேன்களுடன் டெல்லியின் தெற்கு மாகாணத்தில் சென்றுள்ளார். இதனால் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே பாபியை பின் தொடர்ந்தனர் போலீசார். போலீசார் துரத்தி வருவதை கண்டுகொண்ட பாபி தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் ராஷ்ட்ரபதி பவன் அருகே பாபியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது அவரது பால் கேன்களை சோதனை செய்ததில் 7 விலையுயரந்த மது பாட்டில்கள் சிக்கியுள்ளன. ஊரடங்கு அமலில் இருப்பதால் தன் உறவினரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாபி குர்கானில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்துள்ளார்.
மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் அத்தியாவசிய பொருளான பாலை பயன்படுத்தி மதுபாட்டில்களை கடத்திய பால்காரரை போலீசார் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மதுபாட்டில்களை இவருக்கு கொடுத்தவர்கள் யார் என்பதை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.