தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க ரயில்வே துறை பரிசீலனை..!
மூத்த குடிமக்கள் ரயிலில் பயணிக்க மீண்டும் கட்டண சலுகை வழங்குவது பற்றி ரெயில்வே துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
புதுடெல்லி, ரெயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்கனவே பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% சலுகை கட்டணமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% சலுகை கட்டணமும் வழங்கப்பட்டது. கடந்த 2020-ஆம் வருடம், கொரோனா தொற்று காலத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது சம்பந்தமாக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்ததால், மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பயணக் கட்டண சலுகை வழங்கி, அதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கவும் ரெயில்வே துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 70 வயதுக்கு மேல் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்கப்படும். எனவே மூத்த குடிமக்களுக்கான சலுகை முழுவதுமாக நீக்க தேவையில்லை. அதேநேரம் ரெயில்வே துறைக்கான சுமையும் குறையும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஏ.சி. இல்லாத தூங்கும் வசதி மற்றும் சாதாரண பொதுப் பெட்டி பயணிகளுக்கு மட்டும் பயணக் கட்டண சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 70 சதவீத பயணிகளுக்கு சலுகை கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.
அதேபோல, கடைசிநேரத்தில் வரும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்க உதவும் 'பிரீமியம் தட்கல்' முறையை அனைத்து ரெயில்களுக்கும் செயல்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் எல்லாம் பரிசீலனையில் இருப்பதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'சலுகைகளால் ரெயில்வேக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. எனவே மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் சலுகைகளை வழங்குவது என்பது விரும்பத்தக்கது அல்ல' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.