தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சபரிமலையில் புதிய வரலாறு படைத்த பெண்மணிகள்! யார் இந்த பிந்து, கனகதுர்கா?
நேற்று காலை பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரண்டு பெண் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளனர். 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு செல்லும் பக்தர்கள் தான் 18 படிகள் ஏறவேண்டும் என்ற விதிமுறை இருப்பதால், இப்பெண்கள் இருவரும் 18 படிகள் வழியாக செல்லாமல், வி.ஐ.பி. செல்லும் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்திருக்கின்றனர்.
சபரிமலைக்கு நாங்கள் சென்ற போது எங்களை பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டபோதிலும் அவர்கள் யாரும் எங்களை தடுக்கவில்லை என்று சபரிமலைக்கு சென்று வெற்றிகரமாக சுவாமி தரிசனம் செய்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் தெரிவித்தனர். கடந்த மூன்று மாதங்களாக 15க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முயற்சித்த போதும் அவர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை. இந்நிலையில் 10 முதல் 50 வயது பெண்களில் முதன்முறையாக ஐயப்பனை தரிசித்துள்ள பிந்து மற்றும் கனகதுர்கா புதிய சாதனை படைத்துள்ளனர். இருந்த போதிலும் இவர்களுக்கு எதிராக கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை சந்நிதானம் சென்றது குறித்து பிந்து கூறுகையில், ``நிலக்கல் வந்தால் சபரிமலை செல்லலாம் என அரசு ஏற்கெனவே கூறியிருந்தது. இதையடுத்து நாங்கள் நிலக்கல் சென்று அங்கிருந்து பம்பை சென்றோம். பம்பையில் காவல்துறையின் பாதுகாப்பை நாடினோம். அதிகாலை 1.30 மணிக்கு பம்பையிலிருந்து சபரிமலைக்குப் புறப்பட்டோம். அதிகாலை 3.30 மணிக்கு ஐயப்பனை தரிசித்தோம். நாங்கள் மாறுவேடத்தில் செல்லவில்லை. பம்பையிலிருந்து சபரிமலைக்குச் செல்ல மலை ஏறும்போது பக்தர்கள் எங்களை அடையாளம் கண்டுகொண்டனர். ஆனாலும், அவர்கள் போராட்டம் நடத்தவில்லை, தடுக்கவில்லை. காவல்துறையினரும் நல்ல முறையில் பாதுகாப்பு கொடுத்தனர்." என தெரிவித்துள்ளார்.
42 வயதான பிந்து அம்மினி ஒரு வழக்கறிஞர். இவர் இளம் வயதிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டவர். இவர் தற்பொழுது கண்ணூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பாலின நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். மேலும் மாணவர்களிடையே நெருங்கிப் பழகுவதும் அவர்களுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதுமாக செயல்பட்டு வருகிறார். இவர் மற்றொரு அரசியல் போராளியான ஹரிஹரன் என்பவரை திருமணம் செய்து 11 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் கோழிக்கோடு மாவட்டத்தில் பூகாட் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.
இவருடன் ஐயப்பனை தரிசிக்க சென்ற மற்றொரு பெண் கனகதுர்க்கா. இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் பழகி உள்ளார். கனகதுர்கா கேரளா அரசு சிவில் கார்ப்பரேஷனில் பணியாற்றி வருகிறார். திருமணமாகிய இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மலப்புரத்தில் தங்கி வருகின்றனர்.