இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்! தமிழக மருத்துவர்களை மிரட்டிய ஆயுஷ் செயலாளர்!
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா அவமதித்துள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தன. இதில் இந்தியா முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பயிற்றுனர்கள் வைத்ய ராஜேஷ் ஹிந்தியில் பேசியதால் அவர் சொன்ன எதுவும் தமிழ்நாட்டிலிருந்து கலந்துக் கொண்ட மருத்துவர்களுக்கு புரியவில்லை. அப்போது, தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர்கள், ‘எங்களுக்கு இந்தி தெரியாது, நீங்கள் பேசுவது புரியவில்லை என தெரிவித்தனர். மேலும் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதனால், கோபமடைந்த அவர், எனக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து விலகுங்கள் என்று கோபமாக பேசியுள்ளார். வைத்ய ராஜேஷின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்தும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியைத் திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.