எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! சுற்றுலாவை கூடத்தான்!!
நம்முடைய இயந்திர வாழ்வில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுப்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வை கொடுக்கும். விடுமுறை நாட்களை வீட்டில் கழிப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. எனவே சுற்றுலா தளங்களை தேர்வு செய்து குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ செல்வதை விரும்புகின்றனர். நம் பட்ஜெட்டுக்குள் பொருந்துமாறு சுற்றுலா தளங்களைத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல என்ற போதும், சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செலவை கட்டுக்குள் வைக்க முடியும்.
இடத்தை தேர்வு செய்வதற்கு முன், சுற்றுலாவிற்கான உங்களது பட்ஜெட்டை முடிவு செய்து விடுங்கள். போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு, சுற்றிப் பார்க்க உள்ள இடங்கள் என்று அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு அதற்கான செலவு திட்டமிடலை துவங்குங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்த ஊரில் உங்களது நண்பர்களோ அல்லது உறவினர்களோ இருந்தால் அவர்களது வீட்டில் தங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என்றும் ஆலோசனை செய்யுங்கள். வருடத்தில் ஒருமுறை சுற்றுலா செல்ல நீங்கள் முடிவெடுப்பீர்களனால் மாதம் சிறு தொகையை அதற்கென சேமித்துக் கொள்ளலாம்.
முதலில் உங்கள் ஊரின் அருகே உள்ள ஊர்களில் அமைந்த சுற்றுலா தளங்கள், புண்ணிய இடங்கள் ஆகியவற்றையும் உங்கள் சுற்றுலா திட்டத்தில் சேர்க்கலாம். இடத்தை தேர்வு செய்யும் முன் நீங்கள் சுற்றுலா செல்லும் மாதம், அதன் சீதோஷண நிலை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பயண சீட்டு, தங்குமிடம் ஆகியவற்றை முன் பதிவு செய்வதன் மூலம் செலவை குறைக்க முடியும். நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பும் இடங்களை பற்றி உங்கள் நண்பர்களிடம் கேட்டோ அல்லது இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.
சுற்றுலாவை பொறுத்தவரை வருடத்தில் இரண்டு முறை செல்வது நல்லது. ஒருமுறைஆன்மீக சுற்றுலாவாகவும், இன்னொரு முறை இயற்கை அழகு வாய்ந்த பகுதிகளுக்கும் சுற்றுலா செல்வதால் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். சுற்றுலா செல்வது மனதுக்கு மகிழ்ச்சியை அளிப்பதுடன் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் பரஸ்பர புரிதலையும், அன்னியோனியத்தையும் அதிகரிக்கும்.