மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகரித்து வரும் மன அழுத்தம்!. மன அழுத்தத்தில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
சமீப காலமாக அதிகம் பேசப்படும் ஒரு பிரச்சனையாக இருப்பது மன அழுத்தம். மன அழுத்தத்தால் பலரும் தவறான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மனதிற்கு பிடிக்காத செயல்கள் நம் வாழ்வில் அவ்வப்போது நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அதுவே அடிக்கடி நடக்கும் போது அது மன ரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுவே நாளடைவில் மன அழுத்தமாக மாறுகின்றது.
மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பத்தில் பிரச்சனை, பிடிக்காத வேலை, தனிப்பட்ட பிரச்சனை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தம் இருக்கும்.
மன அழுத்தத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி?
நீங்களோ அல்லது உங்களின் நண்பர்களோ, குடும்பத்தினரோ மன அழுத்தத்தில் உள்ளதை கீழ்க்கண்டவாறு அறியலாம்.
வழக்கத்திற்கு மாறாக எரிச்சல், கோபம் அடைவது, பெரும்பாலும் தனிமையை விரும்புவது, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, சரியற்ற தூக்கம், குறைவான பசி, எதிலும் உற்சாகம் இன்றி இருத்தல். அதாவது பிடித்த விஷயத்திலும் சலிப்பாக உணர்வது.
உடலில் ஆற்றலின் அளவு குறைவாக இருத்தல். அதாவது உடலும், மனமும் சோர்வாக உள்ளது. ஆனால் ஏன் என்று தெரியவில்லை? எந்நேரமும் மந்தமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.
மன அழுத்தம் நீடிக்கும் பட்சத்தில் அது, உடலளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அடிக்கடி உடல் சரியில்லாமல் போகும். நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இது போன்றவை ஒருவர் மன அழுத்தத்தில் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.
எவ்வாறு சரி செய்வது?
இன்றைய தலைமுறையினருக்கு எப்பொழுதுமே ஜாலியாக இருக்க வேண்டும். சிறு விஷயம் என்றாலே உடைந்து விடுகிறார்கள். பெரியவர்களை விட சிறுவர்களே அதிகம் இதில் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கையும் கூறுகிறது.
பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இல்லை. ஏதாவது பிரச்சனை வந்தால் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைவருமே போட்டிகள் நிறைந்த உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் உங்களுக்கு மட்டுமே அனைத்து பிரச்சனைகளும் வருவதாக எண்ணாதீர்கள். அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அதை அவர்கள் வெற்றி கொள்வதாலேயே மகிழ்ச்சியானவர்களாக தெரிகிறார்கள்.
சிலருக்கு அலுவலகத்தில் உள்ள பணிச்சுமையின் காரணமாக மன அழுத்ததம் ஏற்படும். இவ்வாறு ஏற்படுவதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொண்டு அதற்கான தீர்வை யோசியுங்கள். அதையே நினைத்து புலம்பிக் கொள்வதால் நம் உடலுக்குதான் அது ஆபத்தை விளைவிக்கும்.
அதிகம் சிரிப்பதற்கு பழகி கொள்ளுங்கள். உங்கள் அருகில் இருப்பவர்களையும் சிரிக்க வையுங்கள். தினமும் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யுங்கள். முடியாது என்னும் எதிர்மறை எண்ணத்தை விரட்டியடியுங்கள்.
தினமும் பொழுதுபோக்கிற்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி, சிறிது நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள். மாதத்தில் ஒருமுறையாவது நண்பர்களுடன் வெளியில் எங்கேயாவது சென்று வாருங்கள்.
நீங்கள் இருக்கும் இடமோ அல்லது செயலோ உங்களுக்கு பிடிக்கவில்லையெனில், அவ்விடத்தை விட்டு சென்றுவிடுங்கள். அங்கேயே நிற்பதற்கு நீங்கள் ஒன்றும் மரம் அல்ல.
இன்றைய போட்டி நிறைந்த காலத்தில் மூளை சுறுசுறுப்பாக இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். எனவே, மேற்கண்டவற்றை கடைபிடித்து மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியாக வாழுங்கள்.