அதிகாலையில் நடிகர் விக்ரம் மகன் கைது; தப்பிக்க முயன்றவர் போலீஸ் கமிஷனர் வீட்டின் அருகே சிக்கினார்



vikram-son-arrested-in-chennai

தமிழ்த் திரைப்படங்களில் வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார்.

இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர். இவர் சென்னை, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

vikram

இவரது மகன் துருவ், 22. 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தின், தமிழ் ரீமேக்காக, பாலா இயக்கும், 'வர்மா' என்ற, படத்தில் நடித்து வருகிறார். 

நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகே, இவர் ஓட்டி வந்த கார்  மின்னல் வேகத்தில் வந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்ற மூன்று ஆட்டோக்கள் மீது வேகமாக மோதியது. இவர் அதற்குமுன் மந்தைவெளி அருகே நண்பர்களுடன் நடந்த பார்ட்டியில் பங்கேற்று  ஆட்டம், பாட்டம் என, கும்மாளமிட்டுள்ளார். மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

vikram

இந்த விபத்தில், ஆட்டோ ஒன்றில் துாங்கிய, ராயப்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் காமேஷ், 26, துாக்கி வீசப்பட்டார். ஆனால், விபத்து ஏற்படுத்திய துருவ், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். உடன், சம்பவ இடத்தில் இருந்தவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதற்கிடையில், ஆழ்வார்பேட்டை முர்ரேஷ் கேட் சாலையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வீடு அருகே தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில், துருவ்வின் கார் சிக்கிக் கொண்டது. உடன், துருவ் மற்றும் அவரது நண்பர்கள், காரை அங்கேயே விட்டு விட்டு தப்ப முயன்றனர். அதற்குள், பொது மக்களும், போலீசாரும், அவர்களை பிடித்தனர்.

இச்சம்பவம் குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், துருவ் மற்றும் அவரது நண்பர்கள் மீது, அதிவேகமாக காரை ஓட்டியது, விபத்து ஏற்படுத்தி காயமடைய செய்தது என, இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர். பின், துருவ் உள்ளிட்ட மூவரையும், அவர்களின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது.