ஆர்.எஸ்.எஸ்-ஐ ஒழிக்க நேருவால் முடியவில்லை!,, நீங்கள் வேண்டுமானால் முயன்று பாருங்கள்: எல்.முருகன் சவால்..!
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டபம் அருகேயுள்ள காமராஜர் நினைவகத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட எல்.முருகன் மேலும் கூறியதாவது:-
முன்னாள் பாரத பிரதமர் நேருவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழிக்க முயற்சி செய்தார், ஆனால் அவரால் அது முடியவில்லை, இங்கேயுள்ள சிலர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். தனி மனிதர்களால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் இன்றோ அல்லது நேற்றோ வந்த இயக்கம் அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்ததால் உருவான இயக்கம்.
இன்று அனைத்து வீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி. காமராஜர்ஆட்சி பொறுப்பில் இருந்த காலம் தமிழகத்தின் பொற்காலம் ஆகும். ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்பதற்கு மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியவர் காமராஜர். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் மிகப்பெரிய அணை கட்டப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.