வேறு யாருமல்ல தி.மு.க தான் காரணம்; விரைவில் அ.தி.மு.க வை மீட்பேன்: சசிகலா சபதம்..!



Sasikala said that DMK is responsible for the split in ADMK

அ.தி.மு.க வில் தலைமை பதவிக்கு ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அக்கட்சியில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு நடந்த பொதுக்குழுவில் அமளி ஏற்பட்டதுடன் ஏராளமான வழக்குகளுக்கு இடையில் நடைபெற்ற 2 வது பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது ஈ.பி.எஸ் அணியினர் ஒரு பிரிவாகவும் ஓ.பி,எஸ் அணியினர் ஒரு பிரிவாகவும், செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க தொடங்கப்பட்ட காலத்தில் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் எம்.பியான மாய தேவர் நேற்று காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது, அ.தி.மு.க என்பது தனிப்பட்ட நபருக்கான கட்சி அல்ல. பொறுத்திருந்து பாருங்கள். அ.தி.மு.கவினர் அனைவரையும் விரைவில் ஒன்றிணைப்பேன். அ.தி.மு.கவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று கூறினார்.

மேலும் அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியின் பின்னணியில் தி.மு.க இருப்பதாக கருதுகிறேன். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தி.மு.க தான் காரணம். தி.மு.க தான் பின்னால் இருந்து செயல்படுகிறது. அ.தி.மு.கவின் பிளவுக்கு மத்திய அரசோ அல்லது பா.ஜனதா கட்சியோ காரணம் இல்லை என்று கூறியுள்ளார்.