பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறாரா சசிகலா?!: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீர் சுற்றுப்பயணம்..!
அ.தி.மு.க-வில் குழப்பம் நிலவி வரும் நிலையில் வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க-வில் தற்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையை அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஊதிப் பெரிதாக்கியுள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனது பயணத்திட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம் என்று குறிப்பிட்டு வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:- '
எம்.ஜி.ஆர்-ன் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி, ஜூன் 26 ஆம்தேதி (இன்று) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன்.
பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.' என தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து அவர் விடுதலையான போது அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் அவரை கண்டு கொள்ளாத நிலையில் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த வி.கே.சசிகலா, கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போதும் ஓ.பி.எஸ் மற்றும் ஆதரவாளர்களின் பின்னணியில் வி.கே.சசிகலா இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் திடீர் அரசியல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.