நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் ஆடிய ருத்ரதாண்டவம்.! சுருண்டு வீழ்ந்த இலங்கை அணி.!
இந்தியாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலகின் முன்னணி வீரர்களான ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொள்ளும்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடர் ( Road Safety World Series டி20) நடைபெற்றது. இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்களான ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இலங்கை போன்ற அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் மோதி, அதில் வெற்றி பெற்று புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அதன் படி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய லெஜண்ட்ஸ் அணியின் துவக்க வீரர் சேவாக் 10 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 30 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய, பத்ரிநாத் 7 ரன்களில் அவுட் ஆனார்.
இதனையடுத்து களமிறங்கிய யுவராஜ்-யூசுப் பதான் பார்ட்னர்ஷிப் இலங்கை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது.யுவராஜ் 60 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். யூசுப் பதான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர்கள் நிதானமாக ஆடினர். தில்ஷன் 21 ரன்களில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடி வந்த ஜெயசூர்யா 43 ரன்களிலும் அவுட் ஆனார். சமர சில்வா 2 ரன்களிலும், உபுல் தரங்கா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக ஆடிய சித்தின்கா ஜெயசிங்கா 40 ரன்களும், கௌசல்யா வீரரத்னே 38 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் தலா 2 விக்கெட்டுகளும், மன்ப்ரீட் கோணி மற்றும் முனாப் படேல் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.