மக்களை குழப்பும் நடிகர் சிவகுமார்; பெண்கள் சபரிமலைக்கு செல்லலாமா கூடாதா?
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று முதலில் பெண்களுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிவகுமார், தற்பொழுது பெண்கள் சபரிமலைக்கு சென்றுதான் வணங்கவேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் கூட வணங்கலாம் என்று கூறியுள்ளார்.
முதலில் சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய நடிகர் சிவக்குமார், "நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர்.
பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை, ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை.
நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்.
இப்போது தடுத்தாலும், இன்னும் ஐந்தாண்டுகளில் பெண்கள் நிச்சயம் சபரிமலைக்கு செல்வர். அதை யாராலும் தடுக்க முடியாது. நாம் இன்று இந்த உலகை பார்ப்பதற்கு காரணம் பெண்கள். அனைவரும் அதை மனதில் வைக்க வேண்டும்," என சிவகுமார் கூறினார்.
இந்நிலையில் இந்தவிவகாரம் பற்றி நடிகர் சிவகுமார் மீண்டும் பேசுகையில், "மாதவிடாய் இருக்கும் பெண்களின் உதிரப்போக்கால் மிருகங்கள் தாக்கக்கூடும் என்பது ஒரு பிரச்சணை இல்லை. ஆனால் கூட்டத்தோடு போய் நெருக்கடியில் ஆண்களுக்கே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது பெண்கள் சென்றால் விளைவுகளை சந்திக்கநேரிடும். மேலும் அங்குள்ள மக்களும் கோபமாக இருக்கும் நேரத்தில் பெண்கள் பிடிவாதம் பிடிக்காமல் இருக்கவேண்டும்.
கடவுள் நம்பிக்கை உள்ள நான் கோவிலுக்கு செல்வதில்லை. வீட்டிலேயே கடவுள் படங்கள் உள்ளது. அதுபோல பெண்கள் சபரிமலைக்கு சென்றுதான் வணங்கவேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் கூட வணங்கலாம்." என்று கூறியுள்ளார்.