பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த கார்: சிக்னலில் நின்ற போது திடீரென பற்றிய தீயால் தொற்றிய பரபரப்பு..!



A car caught fire at a bus stand when it stopped at a signal

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்து வருகிறார். மேலும், அகில இந்திய எரிபந்து கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று தனது சொந்த ஊரான கரூருக்கு காரில் புறப்பட்டார்.

இந்த நிலையில், இரவு சுமார் 7 மணியளவில் கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிக்னலில் கார் நின்று கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது. இதனை கண்ட அவர், உடனடியாக தனது காரில் இருந்து வெளியேறினார். புகை வெளியேறிய சில நிமிடங்களில் காரின் முன் பகுதியில் தீ பற்றி மளமளவென எரிந்தது.

பேருந்து நிலைய சிக்னல் அருகில் காரில் தீ பற்றி எரிந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் 15 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக காரின் முன்பகுதியில் எஞ்சின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. போக்குவரத்து மிகுந்த நேரத்தில் கரூர் மாநகரில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதை பொதுமக்கள் கூடி நின்று பார்த்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.