மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகாரியாக நடித்த ரயில் பிச்சை: ரயில்வேயில் வேலை கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்த ஏமாளி!
விழுப்புரம் மாவட்டம், சொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன். இவர் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு அரசாங்க வேலை பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. இந்த நிலையில் இவரது நண்பரான புவனேஷ் என்பவர், கடலூர் மாவட்டம், பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரை தேவநாதனிடம் அறிமுகம் செய்துள்ளார்.
மாற்றுத்திறனாளியான பக்கிரிசாமி ரயில்வே துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், பலருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை நம்பிய தேவநாதன் தனக்கு மட்டுமில்லாமல் தனது மனைவிக்கும் ரயில்வே துறையில் வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரிகள் கேட்கும் பணத்தை கொடுத்தால் இருவருக்கும் வேலை கிடைத்துவிடும் என்ற பக்கிரிசாமியின் வாக்குறுதியை நம்பிய தேவநாதன், 3 லட்சம் ரூபாயை முதல் தவணையாக கொடுத்துள்ளார். இதன் பின்னர் ஒரு வாரத்தில், தேவநாதனுடைய மொபைல் போன் மற்றும் அவருடைய மனைவியின் செல்ஃபோனுக்கு இந்திய ரயில்வே பணிக்கு பணம் செலுத்தியுள்ளீர்கள். மீதமுள்ள தொகையும் செலுத்தி விட்டால் கோவை கிளையில் நீங்கள் பணி நியமனம் பெறுவீர்கள் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பக்கிரி சாமியை தொடர்பு கொண்ட தேவநாதன் குறுஞ்செய்தி வந்த தகவலை தெரிவித்துள்ளார். விரைவில் மீதி தொகையை செலுத்தி பணி நியமனைத்தை பெறுங்கள் என்று பக்கிரி சாமி கூற, தேவநாதன் மீண்டும் 3 லட்சம் ரூபாயை பக்கிரி சாமியிடம் கொடுத்துள்ளார். பேசிய தொகையை பெற்ற பின்பு குறுஞ்செய்தியும் வரவில்லை, பணி நியமன ஆணையும் வரவில்லை.
பக்கிரிசாமியை தொடர்பு கொண்டால் சரியான பதிலும் இல்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத தேவநாதன், கடலூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பக்கிரிசாமி ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர் என்ற அதிர்ச்சி தகவல் மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து பக்கிரிசாமி, அவரது மகள் மற்றும் புவனேஷ் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.