வயதான தாய் மாயமான வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. இளைய மகன் சொத்துக்காக செய்த பயங்கரம்.!



Ariyalur Jayankondam 85 Aged Mother Murder by Son Due to Land Document Issue

1 ஏக்கர் விவசாய நிலத்தை தாய் தனது பெயருக்கு எழுதிக்கொடுக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால், இளையமகனே அவரை கொலை செய்த பயங்கரம் ஜெயங்கொண்டம் அருகே நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், அமிர்தராயங்கோட்டை கிராமத்தை சார்ந்தவர் சந்திரஹாசன். இவரது மனைவி காமாட்சி (வயது 85). இவர்கள் இருவருக்கும் 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மகள்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார்கள். மீதமுள்ள 2 மகன்களில் ஒருவர் உயிழந்துவிட, காமாட்சி தனியாக வசித்து வருகிறார். 

கடைக்குட்டி மகனான செல்வத்திற்கு (வயது 40) திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தனியாக வசித்துவந்த தாய் காமாட்சி, தனது பெயரில் உள்ள 1 ஏக்கர் விவசாய நிலத்தினை மூத்த மகள் சுமதிக்கு எழுதி கொடுக்க திட்டமிட்டு இருந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயத்திற்கு செல்வம் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, விவசாய நிலத்தை தனது பெயருக்கு எழுதிக்கேட்டு தகராறும் செய்து வந்துள்ளார். 

Ariyalur

இந்நிலையில், தனியே வசித்து வந்த காமாட்சி 2 வாரத்திற்கு முன்னர் மாயமாகியுள்ளார். இவரை பல இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. தாய் மாயமான 2 நாட்களில் மகன் செல்வம் சிறிதளவு பூச்சி மருந்தை உட்கொண்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ஆகினார். தாய் மாயமான துக்கத்தில் அவர் விஷம் அருந்தியதாகவும் தெரிவித்து வந்துள்ளார். இந்த சூழலில், தாய் மாயமானது தொடர்பாக மூத்த மகள் சுமதி தா. பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் அதிகாரிகள் செல்வத்திடம் விசாரணை மேற்கொள்ளவே, தாயை கொலை செய்து உடலை புதைத்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தாய் காமாட்சி அவரது பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்க மறுப்பு தெரிவித்ததால், கட்டையால் அடித்து கொலை செய்து உடலை புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செல்வத்தை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.