ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: கோவில் திருவிழாவில் பயங்கரம்..!



Auto driver cut and killed, horror at temple festival

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகேயுள்ள செம்மஞ்சேரி பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு 5 வது நிழற்சாலை பகுதியில் வசிப்பவர் விக்கி என்ற மைக்கா (27). இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் நண்பர்களுடன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். வீட்டை விட்டு சென்ற சிறிது நேரத்தில் விக்கியை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியதாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த அவரதுமனைவி மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த விக்கியை மீட்டு, சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலத்த வெட்டு காயங்களுடன்  சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவர் விக்கி நேற்று காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விக்கியின் தந்தை ராஜா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கரி என்ற ராமு, சின்னராசு, விநாயகம் என்ற கோட்டி, அப்பு என்ற ஜெயவேலு மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆட்டோ டிரைவர் விக்கியை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராமுவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.