தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியால் மனமுடைந்த 25 வயதான இளைஞர் தற்கொலை; ஊராட்சி ஒன்றிய அலுவலரை இடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்..!
லஞ்சம் கேட்ட விவகாரத்தில் கமுதக்குடி கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுதக்குடியில் மணிகண்டன்(25) என்பவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அனுமதி பெற்றுள்ளார். முதற்கட்ட பணி முடிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மணிகண்டன் முதல் தவணை பணம் கேட்க சென்றுள்ளார். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராமம் மேற்பார்வையாளர் மகேஸ்வரன், அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
அவர் கேட்ட 3,000 லஞ்சம் கொடுத்த பிறகு தான் மகேஷ்வரன் முதல் தவணை பணத்தை வழங்கியுள்ளார். பின்னர் மணிகண்டன் வீட்டில் உள்ள இரண்டாம் கட்ட வேலையை முடித்த பிறகு, இரண்டாம் கட்ட தவணை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றபோது ஒன்றிய ஊராட்சி ஒன்றிய கிராம மேற்பார்வையாளரான மகேஸ்வரன் இன்னும் 15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான மணிகண்டன் வேறு வழியில்லாமல் வெளிநாடு செல்வதற்காக சேமித்து வைத்திருந்த பதினைந்தாயிரம் பணத்தை கொடுத்துள்ளார். 15 ஆயிரம் பணத்தை கொடுத்த பிறகும், பத்து நாட்கள் கடந்த நிலையில் இரண்டாவது தவணை பணம் வராததால் மகேஸ்வரனை தொடர்புகொண்டு இரண்டாவது தவணை பணத்தை கேட்டுள்ளார். மகேஸ்வரன் சரியான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த மணிகண்டன் பூச்சி கொல்லி மருந்து குடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனை பார்த்து சிலர் வீட்டில் மயங்கி கிடந்த மணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.