தந்தத்திற்காக யானை கொலை செய்யப்பட்டதா?.. கோவை வனப்பகுதியில் பேரதிர்ச்சி சம்பவம்.. வனத்துறை விசாரணை.!
வனத்திற்குள் தந்தம் இல்லாமல் யானை உயிரிழந்துகிடந்த நிலையில், அது தந்தத்திற்காக கொலை செய்யப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் வழியே கேரள மாநிலத்திற்கான பிரதான இரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருவதால், அவ்வப்போது அதிவிரைவு இரயில்களில் மோதி யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.
அவ்வப்போது, அங்குள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலிகளில் சிக்கியும் வனவிலங்குகள் உயிரிழக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட விவேக் அதிவிரைவு இரயிலில் மோதி 20 வயது பெண் யானை பலியானது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் யானை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த யானையின் வலதுபக்க தந்தம் காணவில்லை. இதனால் தந்தத்திற்காக யானை கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.