மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பல மருத்துவர்கள் கடந்த 25-ஆம் தேதியில் இருந்து காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 4683 மருத்துவர்கள் நேற்றுமுன்தினம் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தனர். இதனையடுத்து தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
போராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். இதனையடுத்து 2,160 பேர் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு போட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்ட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் தலைமை மருத்துவமனை இயக்குனர்கள், பொது சுகாதாரத்துறை இணை, துணை இயக்குனர்கள் ஆகியோர் நேற்று காலை முதல் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர்.
சில மருத்துவர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 50 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 14 மருத்துவர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.