நிரம்புகிறது மேட்டூர் அணை.. காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயத்துக்கான நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் இன்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலத்தில் வழியாக சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.
இதனால், நாகை மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல், பவானிசாகர் அணையின் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களில் நீர் திறக்கப்பட உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கரூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.