வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி: முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏவின் கணவர் கைது..!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சென்னியப்பா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (48). இவர் இசைக்கல்லூரியில் பட்டம் பெற்றவர். இந்த நிலையில், செல்வி அரசு வேலை கேட்டு புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் கணவர் எம். ஜெய்லானி ( 70) என்பவரை அணுகியுள்ளார். அவரும் அந்த வேலையை வாங்கித் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய செல்வி வங்கியில் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி ஜெய்லானியின் வங்கி கணக்கில் ரூ. 1லட்சமும் , ரூ 4. லட்சம் ரூபாய் நேரடியாக கையில் கொடுத்துள்ளார். சிறிது காலம் கழித்து செல்வி வேலை என்ன ஆனது என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெயலானி கட்டாயமாக வேலை வாங்கி தருவதாக உறுதி கூறி நாட்களை கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், வேலை வாங்கித்தர முடியாவிட்டால் பணத்தை திருப்பி தரும்படி கடந்த நான்கு ஆண்டு காலமாக வீட்டிற்கு பலமுறை சென்று கேட்டுள்ளார்.
இதற்கிடையே பணத்தை திருப்பித்தர மறுத்த ஜெய்லானி, செல்வியை ஆபாசமாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு செல்வி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜெய்லானியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி செல்வியிடம் ரூ. 5 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி மோசடியில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்த ஜெயலானி மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மோசடி புகாரில் சிக்கிய ஜெயலானியின் மனைவி மரியமுள் ஆசியா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.