மாரடைப்பில் மக்கள் சேவை.. 55 பேரை உரிய இடத்தில் சேர்ந்து உயிர்துறந்த அரசு பேருந்து ஓட்டுநர்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!



government-bus-driver-dead-by-heart-attack

அரசு பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், 55 பயணிகளையும் பத்திரமாக பேருந்து நிலையத்தில் கொண்டு சேர்த்துவிட்டு உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் நோக்கி 11 மணியளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது பேருந்து ஓட்டுநராக மீசை முருகேச பாண்டியன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், சாத்தான்குளம் கருங்கடல் பகுதியில் வந்தபோது பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் சாலையோரமாக பேருந்தை நிறுத்திவிட்டு, நடத்துனரிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

ஆனால், சிறிது நேரம் கழித்து சுதாரித்த முருகேசன், "பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர தேவைக்காக சாத்தான்குளம் நோக்கி செல்கின்றனர் என்று கூறி, பேருந்தை எடுத்து சாத்தான்குளம் சென்றுவிடலாம்" என்று நடத்துனரிடம் தெரிவித்திருக்கிறார்.

Thirunelveli

இதனையடுத்து சாத்தான்குளம் பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் பேருந்திலிருந்து இறங்கிய ஓட்டுநரை, பேருந்து நடத்துனர் மற்றும் நேர கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் நெஞ்சு வலி வந்தாலும் பேருந்தில் பயணம் செய்த 55 பயணிகளுக்காக, தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டு பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கொண்டு சேர்த்த பேருந்து ஓட்டுநருக்கு, சக ஓட்டுனர் மற்றும் பேருந்து பயணிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.