பெரம்பலூரில் நடந்தது சாதிய கொலையா? பதற்றத்தை தந்த தகவல்.. எஸ்.பி கொடுத்த விளக்கம்.!



in-perambalur-kaikalathur-murder-case-update

நண்பர்கள் இருவர் இடையே எழுந்த முன்பகையால் நடந்த கொலை, சாதிய கொலை அல்ல என மாவட்ட எஸ்.பி விளக்கம் அளித்து இருக்கிறார்.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர், காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்கள். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சமீபத்தில் வாக்குவாதமும் நடந்துள்ளது.

இதனால் தேவேந்திரன் மீது மணிகண்டன் புகார் கொடுக்க கைகளத்தூர் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு சமாதான பேச்சுவார்த்தைக்கு பேசப்பட்டு, மணிகண்டனை அழைத்துக்கொண்டு காவலர் பிரபு, நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் அருணின் வயலுக்கு சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: பெரம்பலூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; காவலர் சஸ்பெண்ட், எஸ்ஐ உட்பட 4 அதிகாரிகள் ட்ரான்ஸ்பர்.!

Perambalur

இளைஞர் வெட்டிக்கொலை

அங்கு தேவேந்திரன் மணிகண்டன் புகார் கொடுக்கச் சென்ற செய்தி அறிந்து ஆத்திரத்தில் இருந்த நிலையில், மணிகண்டனை பார்த்ததும் ஆவேசமடைந்த தேவேந்திரன், மணிகண்டனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவத்தில் மணிகண்டன் உயிரிழந்துவிட, தேவேந்திரன் கைது செய்யப்பட்டார். 

காவல் நிலையம் மீது தாக்குதல்

மணிகண்டனின் மறைவால் ஆத்திரமடைந்த உறவினர்கள், காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் திருச்சி சரக டிஐஜி வருண்குமார், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல் நிலையத்தில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தாமல், தனியாக அழைத்துச் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்திய தலைமை காவலர் ஸ்ரீதருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும், கைகளத்தூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

எஸ்.பி விளக்கம்

இந்நிலையில், கைகளத்தூர் பகுதியில் நடந்த கொலை தொடர்பாக தவறான தகவல் பதிவு செய்யப்படுகிறது. அங்கு நடந்தது சாதிய கொலை இல்லை. இருவருக்கும் இடையே இருந்த தனிப்பட்ட பகை காரணமாக கொலை நடந்துள்ளது. இந்த விஷயத்தில் காவல் நிலையம் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக 40 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் தெரிவித்தார். 

கைகளத்தூர் கொலை சாதிய ரீதியிலான படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் சாதிய கொலை என கூறுகிறது.

 

இதையும் படிங்க: #Breaking: காவலர் கண்முன் இளைஞர் வெட்டிக்கொலை? பெரம்பலூரில் பதற்றம்.. காவல் நிலையம் கண்ணாடி உடைப்பு.!