மக்கள் பாதையின் மகத்தான திட்டம்; "ஒரே நாளில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழா!"
சமூக மாற்றத்திற்கான இயக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் திரு சகாயம் ஐஏஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இயங்கிவரும் இயக்கம் "மக்கள் பாதை". தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பொறுப்பாளர்களை அமைத்து ஒவ்வொரு சிறு சிறு கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர் இந்த மக்கள் பாதை உறுப்பினர்கள்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி தலைவர்கள் இல்லாத காரணத்தினால் பல உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடங்கிக்கிடக்கின்றன. சிறிய கிராமங்களில் இருந்து மக்களின் குறைகளை மேலிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆளில்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இந்த குறையைப் போக்கும் வகையில் மக்கள் பாதையை சேர்ந்த உறுப்பினர்கள் கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட ஆட்சியரிடமும் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இடமும் கோரிக்கை வைத்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். குறிப்பாக சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராமங்களில் இவர்களின் செயல்பாடு பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று நவம்பர் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மக்கள் பாதை இயக்கத்தினரால் ஒரு லட்சம் பனை மரங்கள் நடும் விழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கிராமத்திலுள்ள பள்ளி குழந்தைகள் மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் அவர்கள் முன்னிலையில் இந்த விதைகள் நடப்பட்டு வருகின்றன.
தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம். மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், தமிழகத்தில் என தமிழர் வளர்ந்த இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது. தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டதும் பனைமரம்தான்! பல்வேறு பலன்களை கொண்ட பனை மரம் இந்தக்காலத்தில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த பனை மரத்தின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மக்கள் பாதை இயக்கத்தினர் இந்த பனை விதை நடும் விழாவை செயல்படுத்தி வருகின்றனர்.
"ஒரு நாள்; ஒரு மணி நேரம்; ஒரு லட்சம் விதை!" என்பதை கருப்பொருளாகக் கொண்டு இன்றைய தினம் மக்கள் பாதை இயக்கத்தினர் இந்த திட்டத்தை துவங்கியுள்ளனர். விதை மட்டும் போட்டாலே போதும் தானாகவே வளர்ந்துவிடும் சிறப்பை பெற்றது பனைமரம்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழப்பட்டி ராசியமங்கலம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற இந்த பனை விதை நடும் விழாவில் மக்கள் பாதை புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மைக்கேல், திருவரங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் திரு. அன்பரசன் மற்றும் கலப்பை திட்ட பொறுப்பாளர் திரு. சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த திட்டம் குறித்து விளக்கமளித்த திரு. அன்பரசன் "இந்த பனை விதை நடும் திட்டமானது "ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு லட்சம் விதை" என்ற நோக்கத்தில் மக்கள் பாதை இயக்கத்தால் இன்று தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படுகிறது. பனைமரத்தின் மகத்துவத்தைப் பற்றியும் மரம் நடுதலின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பள்ளிக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்கள் முன் இந்த பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன. கீழப்பட்டி ராசியயமங்கலம் ஊராட்சியில் உள்ள குளத்தின் கரையோரங்களில் 200 பனை விதைகள் நடப்பட்டுள்ளன." என்று அவர் கூறினார்.
மேலும் இந்த ஊராட்சியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் பாதை இயக்க உறுப்பினர் திரு. அஜிந்திரன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் கற்று கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் பாதை இயக்கத்தின் இந்த மகத்தான முயற்சியை பாராட்டுவதோடு நின்றுவிடாமல், நாமும் நமது பகுதிகளில் இதைப்போன்று பனை விதைகளை நட்டு நம் அடுத்த தலைமுறைக்கு இந்த மரத்தின் பலன்களை கொடுக்க முன்வருவோம்.